தமிழ் இலக்கணம்

>> Thursday, October 25, 2007

தமிழ் இலக்கணம்

ஆசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்

மொழியும் இலக்கணமும்

மனிதன் தன் கருத்தைப் பிறர்க்குக் கூறவும், பிற்ர் கருத்தைப் புரிந்து கொள்ளவும் உண்டாகியது மொழியாகும். அத்தகைய மொழிகளுள் பழமையானது தமிழ் மொழியாகும்.
மொழியைப் பிழையற பேசவும் எழுதவும் பயன்படுவது இலக்கணமாகும். நம் தமிழ் இலக்கணம் எழுத்து, சொல்,பொருள், யாப்பு, அணி என ஐந்து வகைப்படும்.

எழுத்து இலக்கணம்

வாயினால் எழுப்பப்படுவதால் ஒலி எழுத்து எனவும், எழுதப்படுவதால் வரி எழுத்து எனவும் இருவகைப்படும்.

முதலெழுத்து
உயிர் 12, மெய் 18 ஆக 30 முதல் எழுத்துக்கள் ஆகும். இதனை 'அகர முதல் .னகர இருவை முப்பதும் முதலே' என்று பவணந்தியாரும் கூறுவார்.

உயிரெழுத்து
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என உயிரெழுத்து பன்னிரெண்டு ஆகும்.
உயிரெழுத்து குறில், நெடில் என இருவகைப்படும்.

குறில்
அ, இ, உ, எ, ஒ

நெடில்
ஆ, ஈ, ஏ, ஐ, ஓ, ஒள

மெய்யெழுத்து
க் முதல் .ன் ஈறாக பதினெட்டு எழுத்துக்களாகும். இவ்வெழுத்துக்கள் மூன்று இனமாகப் பிரிக்கப்படும்.

வல்லினம்
க், ச், ட், த், ப், ற்

மெல்லினம்
ங், ஞ், ண், ந், ம்,ன்

இடையினம்
ய், ர், ல், வ், ழ், ள்

மத்திரை
ஆய்த எழுத்து - அரை மாத்திரை
மெய் எழுத்து - அரை மாத்திரை
உயிர் மெய்க் குறில் - ஒரு மாத்திரை
உயிர்மெய் நெடில் - இரண்டு மாத்திரை
உயிரும் மெய்யும் கூடி ஒலித்தாலும் உயிர் எழுத்தின் மாத்திரை அளவே உயிர்மெய்யும் பெறும்.

சார்பெழுத்து
முதலெழுத்துக்களைச் சார்ந்து பிறக்கும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் எனப்படும். அஃது பத்து வகைப்படும். அவை 1. உயிர்மெய், 2.ஆய்தம், 3. குற்றியலுகரம், 4. குற்றியலிகரம், 5. ஐகாரக்குறுக்கம், 6. ஒளகாரக்குறுக்கம், 7.மகரக்குறுக்கம், 8. ஆய்தக்குறுக்கம், 9. உயிரளபெடை, 10. ஒற்றளபெடை என்பனவாம்.

1. உயிர்மெய்
உயிரும் மெய்யும் சேர்ந்து ஒலிப்பது உயிர்மெய் எனப்படும்.
க்+அ= க
க்+ஆ= கா
2.ஆய்தம்


3. குற்றியலுகரம்
சொல்லின் ஈற்றில் நிற்கும் வல்லின மெய்யின் மேல் ஏறிய 'உ'கரம் அரை மாத்திரையாக குறைந்து ஒலிக்கும். அது குற்றியலுகரம் எனப்படும். இக்குற்றியலுகரம் அதன் அயல் எழுத்தை நோக்க ஆறு வகைப்படும்.
வன் தொடர் குற்றியலுகரம் - கொக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - பந்து
இடைத்தொடர் குற்றியலுகரம் - மார்பு
உயிர்த்தொடர் குற்றியலுகரம் -உலகு
நெடிற்தொடர் குற்றியலுகரம் - நாடு
ஆய்தத் தொடர் குற்றியலுகரம் - எஃகு

4. குற்றியலிகரம்
குற்றியலுகரத்திற்கு முன் யகரத்தை முதலாகக் கொண்ட சொல் வந்தால், உகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரமும் குரைந்து அரை மாத்தியாக ஒலிக்கும். இதனைக் குற்றியலிகரம் என்பர்.
வடக்கு + யாது = வடக்கியாது
சால்பு + யாது = சால்பியாது
நாடு + யாது = நாடியாது
முற்றியலுகரமாகிய வகர உகரத்தின் முன் யகரம் வந்தால் அம் முற்றியலுகரமும் குற்றியலுகரமும் குற்றியலிகரமாகத்திரியும் அதுவும் அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.
நோவு + யாது = நோவியாது

5. ஐகாரக்குறுக்கம்
ஐகாரம் தன்னைக் குறிக்கும் போதன்றி சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களிய் நிற்கும் போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இதற்கு ஐகாரக்குறுக்கம் என்று பெயர். ஐகாரம் சொல்லின் முதலில் ஒன்றரை மாத்திரையும், இடையிலும் கடையிலும் ஒரு மாத்திரையும் பெறும்.
ஐந்து - மொழி முதல்
கலைஞர் - மொழி இடை
பறவை - மொழிக்கடை

6. ஒளகாரக்குறுக்கம்
'ஒள' என்னும் நெட்டெழுத்து சொல்லில் நின்று ஒலிக்கும் போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பது 'ஒளகாரக் குறுக்கம்' எனப்படும்.

'ஒள'காரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் இறுதியிலும் வாராது.
ஒளவையார், வெளவால், மெளவல்

7.மகரக்குறுக்கம்
மகரம் தனக்குரிய அரை மாத்திரையினின்று குறுகி கால் மாத்திரையாக ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும்
மருளும் - மருண்ம்
போலும்- போன்ம்
அசைச் சொல்லாகிய மியாவில் நிற்கும் மகரமும் குறுகி ஒலிக்கும்
செல் + மியா = சென்மியா
கேள் + மியா = கேண்மியா

8. ஆய்தக்குறுக்கம்
ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து குறுகி ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் ஆகும். ல, ள ஈற்றின் முன் தகரம் வந்து புணர்கின்ற போது தோன்றும் ஆய்தம் குறுகி கால் மாத்திரையாக ஒலிக்கும்
கல் + தீது = கஃறீது
முள் + தீது = முஃடீது

9. உயிரளபெடை
சொல்லின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் உள்ள நெட்டெழுத்துக்கள் தமக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து நீண்டு மூன்று மாத்திரை அளவு ஒலிப்பது அளபெடை எனப்படும். இஃது உயிரளபெடை, ஒற்றளபெடை என இரண்டு வகைப்படும்.
உயிரெழுத்து அளபெடுத்து வருவது உயிரளபெடை ஆகும். உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை 1. செய்யுளிசை அளபெடை, 2. இன்னிசை அளபெடை, 3. சொல்லிசை அளபெடை என்பனவாம்.

1. செய்யுளிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் அளபெடுத்து நீண்டு ஒலிப்பது செய்யுளிசை அளபெடை ஆகும். இதனை 'இசைநிறை அளபெடை' என்றும் வழங்குவர்.

சான்று
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
இக்குறளில் 'ஓதல்' 'ஆதும்' என்றிருப்பின் நேரொன்றாசிரியத்தளையாக நின்று வெண்பாவிற்குரிய ஓசை கெடும்.'ஓஒதல்', 'ஆஅதும்' என்று அளபெடுத்து வெண்பாவிற்குரிய ஓசையை நிறைவு செய்கிறது.

2. இன்னிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிய ஓசை தருவதற்காக குறில் நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.
சான்று
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
இக் குறளில் 'கெடுப்பதும்', 'எடுப்பதும்' என்று இருந்தாலும் ஓசை குறைவதில்லை (தளையும் தட்டுவதில்லை) ஆயினும் இனிய ஓசை தருவதற்காக 'கெடுப்பதும்', 'எடுப்பதும்' என்பவற்றில் உள்ள 'து' என்ற உயிர்மெய்க்குறில் 'தூ' என்று நெடிலாகி 'தூஉ' என அளபெடுத்து நிற்கிறது.

3. சொல்லிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் ஒரு சொல் வினையெச்சப் பொருளாவதற்கு அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்பெயர்.
சான்று
அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

இக்குறளில் 'அறன் அழி', 'புறன் அழி' என்று இருந்தாலும் செய்யுளில் ஓசை குறைவதில்லை. ஆனால் 'அழி' என்னும் வினைப்பகுதி 'அழித்து' என்னும் வினையெச்சப் பொருளைத் தரும் பொருட்டு 'அழீஇ' என்று அளப்பெடுத்துள்ளது சொல்லிசை அளபெடை ஆகும்.

10. ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்யும் பொருட்டு சொல்லின் இடையிலும், இறுதியிலும் நிற்கும் (ங், ஞ், ண், ந், ம்,ன், வ், ய், ல், ள்,ஃ, - குறிற் கீழும்,குறிலிணைக் கீழும்) ஒற்றெழுத்து அளபெடுப்பது ஒற்றளபெடை எனப்படும்.
க்ண்ண்ணன், எஃஃகிலங்குவேல், மன்ன்னன்

சுட்டெழுத்து
ஒன்றனைச் சுட்டிக்காட்ட அ, இ, உ என்னும் மூன்று உயிர்களும் உதவுவதால் இவற்றைச் சுட்டெழுத்துக்கள் எனலாம்.
சான்று
அம்மாணவன், இக்குழந்தை, உவ்வீடு






0 comments:

Post a Comment

  © Blogger template Snowy Winter by Ourblogtemplates.com 2009

Back to TOP